Asianet News TamilAsianet News Tamil

தலைவிரித்தாடும் போதைப்பொருள் புழக்கம்; தமிழக அரசை 6 மாதம் முடக்க வேண்டும் - அதிமுக பரபரப்பு குற்றச்சாட்டு

போதைப்பொருள் நடமாட்டத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் நிலையில் தமிழக அரசை ஆறு மாதம் முடக்க வேண்டும் என புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு படி தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி,  வருங்கால தலைமுறையினர் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும், போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்படுத்திய தமிழக திமுக அரசை கண்டித்தும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி புதுச்சேரியில் அதிமுக சார்பில் அண்ணா சாலையில், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பேசிய அன்பழகன், புதுச்சேரி மாநிலம் முழுவதும் 500 இடங்களில் கஞ்சா விற்கப்படுகிறது. உப்பளம் தொகுதியில் 10 இடத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்த அவர், போதை ஊசி முதல் போதை ஸ்டாம்ப் உள்ளிட்ட பொருட்கள் வரை தாராளமாக கிடைக்கிறது. இதை எல்லாம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தால் தங்கள் மீது காய் (பாம்) எடுத்து வீசிவிடுவார்கள் என்ற பயத்தில் தான் புகார் அளிக்கவில்லை என்றார்.

போராட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பழகன், தமிழகத்தில் போதை கடத்தல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே 356 வது பிரிவை பயன்படுத்தி தமிழக அரசை ஆறு மாதத்திற்கு மத்திய அரசு முடுக்க வேண்டும் என்றார்.

Video Top Stories