நொடிப்பொழுதில் உயிர் தப்பிய சிறுவன்; பொதுமக்களுடன் சேர்ந்து திமுக எம்எல்ஏவை ரவுண்டு கட்டிய அதிமுக எம்எல்ஏ

புதுச்சேரியில் மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடையில் விழுந்த சிறுவன் நொடிப்பொழுதில் காப்பாற்றப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த திமுக சட்டமன்ற உறுப்பினரை பொதுமக்களுடன் இணைந்து முன்னாள் எம்எல்ஏ வாக்குவாத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

First Published Dec 20, 2023, 10:43 PM IST | Last Updated Dec 20, 2023, 10:43 PM IST

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட எல்லையம்மன் கோவில் வீதியில் வசித்து வருபவர் வேலு - லட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் புதுச்சேரி அஷ்ரப் அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இன்று மதியம் பள்ளியை விட்டு வீட்டிற்கு சகோதரர்களுடன் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது பாதர் சாகிப் வீதியில் வந்து கொண்டிருக்கும் பொழுது பாதாள சாக்கடை மூடப்படாமல் சாக்கை கொண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனை கவனிக்காமல் சென்ற 9ம் வகுப்பு படிக்கும் பிரவீன் என்ற மாணவன் சாக்கடையில் விழுந்தான். உடனடியாக மாணவனின் சகோதரர்கள் மற்றும் தாய் அச்சிறுவனை மீட்டனர்.

இதனை அறிந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாநில செயலாளருமான அன்பழகன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை மீட்டு முதலுதவி அளிக்கும் பணியில் ஈடுபட்டார். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து  சம்பவ இடத்திற்கு வரவழைத்து இது குறித்து விசாரித்தார். இதனைத் தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர் அணி பால் கென்னடி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார். 

அப்போது அதிமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகனுக்கும், தற்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினர் அணிபால் கென்னடிக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் கடுமையான வார்த்தைகளால் பேசிக்கொண்டனர். மேலும் ஒரு கட்டத்தில் கோபமடைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன், திமுக எம்எல்ஏவை பார்த்து என்ன பணி செய்கிறீர்கள் என்று லெப்ட் அண்ட் ரைட்டு வாங்கினார்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கடுமையான ஆவேசத்துடன் திமுக எம்எல்ஏவை ரவுண்டு கட்டி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் உடனடியாக சிமெண்ட் போட்டு அந்த பாதாள சாக்கடையை மூடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் ஒரே தொகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினரும் ஒன்றாக நேருக்கு நேராக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் இதை வீடியோவாக பதிவு செய்த இருவரின் ஆதரவாளர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவன் பாதாள சாக்கடையில் விழும் சிசிடிவி கட்சியை தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video Top Stories