இதுபோன்ற தைரியமான முடிவை அதிமுகவால் மட்டும் தான் எடுக்க முடியும் - சீமான் புகழாரம்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள அதிமுகவின் முடிவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைவர்கள் குறித்து தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்து வந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது. இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், அதிமுகவின் முடிவு தாமதமான ஒன்று என்றாலும், அதனை வரவேற்கிறேன்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற தைரியமான முடிவை அதிமுகவால் மட்டும் தான் எடுக்க முடியும். பேரறிஞர் அண்ணாவை விமர்சித்ததற்காக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக தைரியமாக அறிவித்துள்ளது. இதுபோன்ற தைரியமான முடிவை திமுகவால் எடுக்க முடியுமா?
கச்சத்தீவை தாரை வார்த்தது, நீட் தேர்வை அமல்படுத்தியது, இலங்கையில் இனப்படுகொலை நிகழ்த்தியது உள்ளட்ட செயல்களில் ஈடுபட்ட காங்கிரசில் இருந்து ஏதேனும் ஒரு காரணத்தை சுட்டிக்காட்டி கூட்டணியில் இருந்து திமுக வெளியேறுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.