பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர் மணிப்பூராகிவிடும்.. எச்சரித்த முதல்வர் முக ஸ்டாலின்..
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர் மணிப்பூராகிவிடும் எனத் திருப்பூரில் நடைபெற்ற பரப்பரை பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்.
திருப்பூர் மற்றும் நீலகிரி தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவிநாசி பழங்கரை பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரும் , திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கலந்து கொண்டிருந்தார். நீலகிரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ. ராசா, திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சுப்பராயன் ஆகியோரை ஆதரித்து பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், “வந்தாரை வாழ வைக்கும் திருப்பூருக்கு வந்திருக்கிறேன். இங்கு வந்துள்ள நீங்கள் மட்டும் அல்லாது ஸ்டாலினின் தூதுவர்களாக உங்கள் பகுதி மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும் , இந்தியாவின் ஜனநாயகத்தை மீட்கவும் , சர்வதிகாரத்தை அகற்றுவமான தேர்தல் ஆகும்.
நேற்று கோவையில் ராகுல் காந்தி கலந்து கொண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தை பார்த்திருப்பீர்கள் பாகுபலி படம் போல பிரம்மாண்டமாக இருந்ததா ? அந்த ஒரு மீட்டிங் மொத்த பாஜகவை க்ளோஸ் செய்து விட்டது. இது சாதாரண தேர்தல் அல்ல இரு தத்துவதற்கான போர் என நான் தொடர்ந்து கூறி வருவதை சகோதரர் ராகுல் காந்தியும் தெரிவித்து சென்றுள்ளார். ஒன்றியத்தில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வார் ஏனென்றால் சமூக நீதி பாஜகவிற்கு அலர்ஜி. புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய சட்ட திருத்தத்தை மாற்றுவார். நாடு முழுவதும் கலவரங்கள் அதிகமாகும். ஏனென்றால் கலவரம் பாஜகவின் டிஎன்ஏவில் அதிகமாக உள்ளது.
திருப்பூரில் ஓட்டு கேட்டு வந்த பாஜகவிடம் ஜிஎஸ்டி பற்றி கேள்வி எழுப்பிய வரை பாஜகவினர் தர குறைவாக பேசி தாக்கியதை பார்த்திருப்பீர்கள். மீண்டும் பாஜக ஆட்சி அமையுமானால் திருப்பூர் மணிப்பூர் ஆகிவிடும். அமைதி குலையும் , தொழிலுக்கு ஏற்ற சூழல் நிலவாது , திருப்பூர் கோவை உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்கள் வந்தாரை வாழவைக்கும் மாவட்டங்களாக எங்கிருந்து இங்கு வந்தாலும் பிழைத்துக் கொள்ளலாம் என இருந்ததை மாற்றி மோடி பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி என இரட்டை தாக்குதலை நடத்தி தொழிலை நலிவடைய செய்தார். பஞ்சநூல் விலை உயர்வை கட்டுப்படுத்த தொடர்ந்து தொழில்துறையினர் வலியுறுத்திய போது அதனை செய்யவில்லை.
வங்கதேசத்தில் இருந்து துணி இறக்குமதி செய்ததால் பின்னலாடை உற்பத்தி தொழில் முற்றிலுமாக முடங்கிப் போனது , சிறுகுரு தொழில்கள் அழிவு பாதைக்கு வந்துள்ளன , என்னை சந்தித்த சிறுகுரு நிறுவன உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை என்னிடத்தில் வைத்துள்ளார்கள் நிச்சயம் தேர்தல் முடிந்தவுடன் அவர்களை அழைத்து பேசி அவர்கள் கோரிக்கைக்கு தீர்வு காண்பேன். 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் புதிய இந்தியா உருவாக்கப்படும் என்று மோடி கூறினார் ஆனால் 10 ஆண்டுகால மோடியின் ஆட்சியில் , பத்திரிகையாளர்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.
32 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் வாழ்க உள்ளனர் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது இதுதான் புதிய இந்தியா ? மோடியின் வளர்ச்சியா ? 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை அதனால் தான் எந்த மேடையிலும் மோடியால் திட்டங்களை பற்றி பேச முடியவில்லை. ஆனால் திமுக ஆட்சி அமைந்த உடன் திட்டங்கள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கடுமையான நிதி நெருக்கடி அளித்த போதும் கூட , நமது திட்டங்களால் தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்தாயிரம் ரூபாய் வந்து சேரும் அளவு திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளது” என்று பேசினார்.