உலக அருங்காட்சியகங்கள் தினம்.. மதுரை அரசு அருங்காட்சியகத்தில் 6 நாள் நடக்கும் விழா - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

World Museum Day : பல்லாங்குழி, நொண்டி, தட்டாங்கல், தாயம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு மதுரை அரசு அருங்காட்சியம் நடத்தி வருகின்றது.

First Published May 12, 2024, 10:28 PM IST | Last Updated May 12, 2024, 10:28 PM IST

தமிழ்நாடு அரசு அருங்காட்சியகங்கள் துறையின் கீழ் இயங்கும் மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், மே 18-ஆம் தேதி உலக அருங்காட்சியகங்கள் தினத்தை முன்னிட்டு தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் தொடர்பான போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று மே 11-ஆம் தேதி தொடங்கி, மே 16ம் தேதி வரை பல போட்டிகள் நடைபெறவுள்ளது. 

அதன்படி நேற்று மே 11ல் பல்லாங்குழி, இன்று 12ம் தேதி தட்டாங்கல், 13ம் தேதி தாயம், 14ம் தேதி நொண்டி, 15ம் தேதி கிட்டிபுல், 16ம் தேதி கோலிக்குண்டு ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றது. ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணிக்கு அந்த போட்டிகள் நிறைவடையும். போட்டியில் பங்கு பெற விரும்புவோர் தங்களது பெயர்களை 97900 33307 என்ற செல்பேசி எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும். 

இப்போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. போட்டிக்கான விதிமுறைகள் போட்டி நடைபெறும் நாளன்று வழங்கப்படும். இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் அருங்காட்சியக விதிமுறைகளுக்கு உட்பட்டு பெரியவர்கள் ரூ.5-ம், சிறியவர்கள் ரூ.3-ம், வெளிநாட்டவர்கள் எனில் ரூ.100-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

இப்போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்படும், இன்றைய தினம் தட்டாங்கல் போட்டியானது நடைபெற்றது, தட்டாங்கல் ஆட்டம் ஒரே மாதிரியான உருண்டையான சிறு கற்களைக் கொண்டு பெரும்பாலும் சிறுமியர் விளையாடும் விளையாட்டாக இருந்து வருகின்றது. 

இது பாண்டிக்கல் என்றும் அழைக்கப்படும். சங்க காலத்தில் இதன் பெயர் தெற்றி. இவ்விளையாட்டு வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு எண்ணிக்கையுள்ள கற்களைக் கொண்டு விளையாடப்படுகிறது. இன்றைய போட்டியில் சிறுவர் சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி கலந்துகொண்டு தட்டாங்கல் விளையாடினர்.