கன்னியாகுமரி.. ராட்சத அலையில் சிக்கிய இரு சுற்றுலா பயணிகள் - பொதுமக்கள் போராடியும் இறுதியில் நேர்ந்த சோகம்!
Kanyakumari : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முட்டம் கோடிமுனை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே கடல் சீற்றத்துடனே காணப்பட்டுள்ளது.
மேலும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவும், சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடையும் விதித்துள்ளது. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த 16-பேர் கொண்ட குழு ஆன்மீக சுற்றுலாவாக கன்னியாகுமரி வந்துள்ளனர். அவர்கள் குளச்சல் அருகே கோடிமுனை மீனவ கிராமத்தில் உள்ள ஆலயத்தை சுற்றி பார்த்து விட்டு மதிய உணவு ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.
அப்போது அந்த குழுவில் இருந்த மனோஜ்குமார், விசூஸ் ஆகியோர் கடற்கரைக்கு சென்று கடலில் உள்ள பாறை மீது ஏறி நின்று கடல் அலைகளை பார்த்து ரசித்துள்ளனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கிய இருவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட மாயமான நிலையில் தகவல் அறிந்து வந்த மீனவர்கள் படகுகள் மூலம் தேடி படுகாயங்களுடன் இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இருவரையும் பொதுமக்கள் பைக் மற்றும் கார் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து இருவரின் சடலத்தையும் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த கடலோர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் இருந்து ஆண்மீக சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் இருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.