Family Committed Suicide : சின்னமனூரில் பரபரப்பு.. கடன் தொல்லை.. கணவன், மனைவி, மகன் விஷம் குடித்து தற்கொலை!

Family Commits Suicide : தேனி மாவட்டம் சின்னமனூர், சொக்கநாதபுரம் தண்ணி தொட்டி  அருகே வசித்து வருபவர் செவந்தி வீரன் இவர் பள்ளிகோட்டபட்டியில் உள்ள தனியார் மதுபான பார் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

First Published Mar 29, 2024, 9:13 PM IST | Last Updated Mar 29, 2024, 9:14 PM IST

இவரது மனைவி ஒச்சம்மால், இவர்களுக்கு அனுசியா என்ற மகளும், ராஜேஷ் என்ற மகனும் உள்ளனர். மகன் சின்னமனூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து குடும்ப பிரச்சனை காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  இன்று காலை வீட்டில் வெகு நேரமாக மின் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி யாரும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது செவத்திவீரன், அவரது மனைவி, மகன் ஆகிய மூவரும் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளனர்.

உடனடியாக சம்பவம் குறித்து  சின்னமனூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தினருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாகவும், அதனால் பல நாட்களாக மன உளைச்சல் இருந்து வந்ததாக உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டது சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Video Top Stories