தூத்துக்குடி.. விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் கைது - துறைமுக வாயில் முன் மீனவர்கள் சாலை மறியல்!
Thoothukudi : தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் போஸ்கோ கைது செய்யப்பட்டதை அடுத்து, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக நுழைவு வாயில் முன்பு மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடந்த 5 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கேரள மாநில பதிவு என் கொண்ட ஒரு விசைப்படகு, மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 5 விசைப்படகுகள் என மொத்தம் ஆறு விசைப்படைகள் மற்றும் 86 மீனவர்களை சிறை பிடித்து வந்தவுடன் மீனவர்களை, மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வசம் ஒப்படைத்தனர்
தொடர்ந்து மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம், எல்லை தாண்டி மீன்பிடிப்பில் ஈடுபட்டும் வரும் கேரளம் மற்றும் பிற மாவட்டச் சார்ந்த மீனவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக தமிழக அரசு தங்களுக்கு ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கவும், தங்கள் பகுதியில் வந்து கேரளா மற்றும் கன்னியாகுமரி விசைப்படகு மீனவர்கள் தொழில் செய்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
மேலும் தமிழகம் முழுவதும் ஏப்ரல் மே மாதங்களில் அரசு சார்பில் மீன் இனப்பெருக்கத்திற்காக தடைக்காலம் விதிக்கப்படும் பொழுது விசைப்படகுகள் கடலுக்கு செல்லாத நிலையில், அந்த காலங்களில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த விசைப்படகுகள் தமிழக கடற்பகுதியில் மீன்பிடிப்பதால் மீன்வளம் முற்றிலுமாக அழிந்து வருகிறது. இதையும் தடுக்க வேண்டும் என்றனர் மீனவர்கள்.
மேலும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை தாங்கள் விடுவித்தும், அவர்களை தாங்கள் கொடுமைப்படுத்துவதாகவும் தாக்குவதாகவும் வீண் வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று தூத்துக்குடி மீன் பிடித்து துறைமுகத்திற்கு தூத்துக்குடி ASP-
கொல்கர் சுப்பிரமணிய பால் சந்திரா தலைமையில் வந்த போலீசார் தூத்துக்குடி விசைப்பட உரிமையாளர் சங்க தலைவர் போஸ்கோவை விசாரணைக்கு என்று அழைத்துச் சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
அதை தொடர்ந்து விசைப்படை உரிமையாளர்கள் மற்றும் விசைப்படகு தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள மீன்பிடி துறைமுக நுழைவாயில் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.