DSP ரேங்கில் இருந்த "சீசர்" என்ற மோப்பநாய்.. உடல் நலக்குறைவால் இறப்பு - 12 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்!
Thanjavur : பல வருடமாக காவல்துறையினருக்கு பல வகையில் உதவிய சீசர் என்ற மோப்பநாய் இறந்துள்ளது, தஞ்சாவூர் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை காவல் பிரிவில், கடந்த 2015ம் ஆண்டு முதல், கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் வெடிமருந்து மற்றும் வெடிப்பொருட்களை கண்டறியும் பிரிவில் பணிபுரிந்து வந்த மோப்பநாய் தான் சீசர். தஞ்சாவூருக்கு முதல்வர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வரும்பொழுது சீசர் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த சீசர், தனது ஒன்பதாவது வயதில் இன்று உயிரிழந்துள்ளது. இதனை அடுத்து தஞ்சை டிஐஜி அலுவலகம் பின்புறத்தில் உள்ள இடத்தில், 12 குண்டுகள் முழங்க அரசு மரியாதையோடு சீசர் என்கின்ற அந்த மோப்ப நாயின் உடலானது அடக்கம் செய்யப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உள்ளிட்ட பல முக்கிய காவல்துறை அதிகாரிகள் சீசருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.