Asianet News TamilAsianet News Tamil

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்!

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார்.
 

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்ய பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்துள்ளார். தனி விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகை புரிந்தார். பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், படகு மூலம் கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு பிரதமர் மோடி சென்றார். இன்று மாலை முதல் ஜூன் 1ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு விவேகானந்தர் பாறையில் தங்கியிருந்து அங்குள்ள தியான மண்டபத்தில் இரவு பகலாக பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ளவுள்ளார்.

முன்னதாக, கன்னியாகுமரி வந்தடைந்ததும் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு கடற்கரை அருகே அமைந்துள்ள பகவதி அம்மன் கோயிலில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சுவாமி தரிசனம் செய்த அவருக்கு கோயில் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும்,ம் பகவதி அம்மன் புகைப்படமும் பிரதமர் மோடி வழங்கப்பட்டது.

பிரதமரின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கன்னியாகுமரி முழுவதும் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories