மூணாறில் தமிழக அரசுப் பேருந்தை வழிமறித்த படையப்பா யானை; மரண பீதியில் பயணிகள்
கேரளா மாநிலம் மூணாறில் தமிழக அரசுப் பேருந்தை வழி மறித்த படையப்பா காட்டு யானையால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் மரண பீதி அடைந்தனர்.
கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் படையப்பா மற்றும் கொம்பன் ஆகிய இரண்டு காட்டு யானைகள் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தும், சாலையில் செல்லும் வாகனங்களை வழி மறித்தும் அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக படையப்பா யானையின் தொல்லை இல்லாமல் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்ட எல்லையான கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் படையப்பா யானை சாலைகளில் வளம் வந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நைமக்காடு எஸ்டேட் பகுதி அருகே உள்ள சாலையில் சென்ற லாரியை மறித்து நின்ற நிலையில் தற்போது நேற்று இரவு மூணாறில் பயணிகளை ஏற்றி வந்த தமிழக அரசு பேருந்தை வழிமறித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அச்சுறுத்தி வந்தது.
படையப்பா யானை பேருந்து முன் வந்து நின்றதும் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்து பேருந்தை பின்னால் இயக்க ஓட்டுனரிடம் கூறியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரமாக பேருந்தை வழிமறித்து நின்ற யானை பின் அங்கிருந்து நகர்ந்து சென்றது. இதனை அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் தங்கள் செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.