நீலகிரி : நிரம்பி வழியும் அணைகள்! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குந்தா, பில்லூர், சாண்டி நல்லா மூன்று அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி முதல் 800 கனஅடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 13 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக உதகை குந்தா கூடலூர் பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு பகலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளான குந்தா, பைக்காரா, அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்ட் கெத்தை, பார்சன்ஸ்வேலி, மாயார் உள்ளிட்ட அனைத்து அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டி வருகிறது.
இந்நிலையில் குந்தா, கெத்தை, பில்லூர், சாண்டி நல்லா உள்ளிட்ட அணைகளில் இரண்டாவது நாளாக நீர் முழு கொள்ளளவை எட்டியதால் தற்போது அணைக்கு வினாடிக்கு 500 முதல் 800 கன அடி நீர் வந்த வண்ணம் உள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.