"மோடி மீண்டும் பிரதமராகக்கூடாது.. அண்ணாமலை வெற்றி பற்றி எனக்கு தெரியாது" - சுப்பிரமணியன் சாமி பேட்டி!

Subramaniam Swamy : மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி பல சர்ச்சையான விஷயங்களை பேசி உள்ளார்.

Share this Video

மதுரை மாவட்ட பாஜக நிர்வாகியான சசிகுமார் என்பவருடைய இல்லத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்திருந்தார் சுப்பிரமணியன் சாமி. அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தை பொறுத்தவரை நயினார் நாகேந்திரன் கட்டாயம் வெற்றி பெறுவார் என்றும், அண்ணாமலையின் வெற்றி எப்படி இருக்கும் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். 

தமிழகத்தில் திமுக - பாஜக என்று தேர்தல் களம் மாறி உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, கனவு என்பது எல்லோருக்கும் இருக்கின்றது. அது நடக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று சிரித்தபடி பதில் அளித்தார். மேலும் வேட்பாளர்களை எல்லா இடத்திலும் நம்மால் நிறுத்த முடியும் ஆனால் அடிப்படை அமைப்பு வலுவாக உள்ளதா என்பதைத்தான் பார்க்க வேண்டும். 

பணத்தை கொடுத்து விளம்பரம் வேண்டுமானால் செய்யலாம், ஆனால் மக்களின் நம்பிக்கையை பெற்றால் மட்டுமே எல்லாம் சாத்தியம் என்றும் அவர் கூறினார். அதேபோல மோடியின் ஆட்சியில் இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையவில்லை. வெளியுறவு கொள்கைகளிலும் சிறப்பாக செயல்படாததால், பிரதமர் மோடி, சீனா இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கவில்லை, மோடி இதுவரை எதுவுமே செய்யவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். 

மேலும் பாஜகவில் இருந்து தனக்கு பிரச்சாரம் செய்ய அழைப்பு எதுவும் வரவில்லை என்றும், அழைப்பு வந்தால் நிச்சயம் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்றும் உறுதியளித்துள்ளார். மோடி மூன்றாவது முறையும் பிரதமர் ஆவாரா என்ற கேள்விக்கு அவர் மீண்டும் பிரதமராகவே கூடாது என்று சர்ச்சையான பதில் ஒன்றை அளித்திருக்கிறார் சுப்ரமணியன் சாமி. 

Related Video