Watch : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆடு சந்தை! - ரூ.1 கோடிக்கும் மேல் விற்பனை!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மணப்பாறை ஆட்டுச் சந்தையில் விற்பனை களைகட்டியது. சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனையானது.
 

First Published Jul 6, 2022, 12:14 PM IST | Last Updated Jul 6, 2022, 12:14 PM IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மாட்டுச் சந்தை மிகவும் சிறப்பு பெற்றதாகும். இச்சந்தையில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை காலை ஆட்டுச்சந்தையும் நடைபெறும். இந்த சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். திடகாத்திரமான ஆடுகள் விற்பனைக்கு வரும் என்பதாலும் விலையும் கணிசமாக இருக்கும் என்பதாலும் பெரும்பாலான வியாபாரிகள் மணப்பாறை ஆட்டுச்சந்தையில் ஆடுவாங்க விரும்புவார்கள்.

வழக்கமாக இருக்கும் விற்பனையை விட தீபாவளி, கோவில் திருவிழா காலங்கள் மற்றும் பக்ரீத், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஆடுகளின் விற்பனையும் அதிகம் இருக்கும் என்பதுடன் விலையும் சற்று உயர்ந்தே இருக்கும். இந்நிலையில் தற்போது கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில், இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுப்பதற்காக ஆடுகள் வாங்குவார்கள் என்பதால் இன்று நடந்த ஆட்டுச் சந்தைக்கு அதிக அளவில் ஆடுகள் கொண்டுவரப்பட்டிருந்தன.

நாட்டு ஆடுகள், கொடிஆடு, குரும்பை ஆடு, மேச்சேரிஆடு போன்ற வகை ஆடுகளும் ஆந்திராவில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதே போல் ஆடு வாங்கவும் அதிக அளவிலானோர் வந்திருந்தனர். வரும் ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் பண்டிகை என்பதால் குர்பானி கொடுக்க திடகாத்திரமான ஆடுகளை தேர்வு செய்து போட்டிபோட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

ஆடுகள் சுமார் 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை விலைபோனது. சாதாரண நாட்களை விட இன்று ஒரு ஆடு 4 ஆயிரம் முதல் 9 ஆயிரம் ரூபாய் வரை அதிகம் விலை போனது என்றாலும் பலரும் தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கிச் சென்றனர். சுமார் 4 மணி நேரம் மட்டுமே நடைபெற்ற சந்தையில் ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் ஆடு விற்பனை மூலம் வர்த்தகம் நடைபெற்றது. ஆடுகளை வாங்க வந்தவர்களுக்கு அதிக விலை என்றாலும் விற்க வந்தவர்களுக்கு அடித்தது ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும்.
 

Video Top Stories