"திமுக தேர்தல் அறிக்கையை கசக்கி வீச வேண்டும்".. கரூரில் நடந்த பாஜக செயல்வீரர்கள் கூட்டம் - சீரிய அண்ணாமலை!

Annamalai Slams DMK : கரூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், கரூர் மாவட்ட பாஜக சார்பில் பாராளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் இன்று மார்ச் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

First Published Mar 26, 2024, 9:45 PM IST | Last Updated Mar 26, 2024, 9:45 PM IST

பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரை ஆற்றினார். இதில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அண்ணாமலை..
 
கரூர் பாராளுமன்ற தொகுதியில் நிறைய பிரச்சனைகள் உள்ள தொகுதி. ஜோதிமணியை போல மூன்று மாதத்திற்கு முன்பு தேர்தல் சமயத்தில் தொகுதியை எட்டிப் பார்க்கக் கூடாது. 365 நாட்களும் இங்கேயே இருக்கக்கூடிய, பிரதமர் சொல்வதை செய்யக்கூடிய எம்.பி உங்களுக்கு தேவை. நல்ல காரியம், கெட்ட காரியம் என அனைத்திலும் கூடவே இருக்க வேண்டும். 

செந்தில்நாதனுக்கு கட்சியில் வேறு பொறுப்புகள் நான் தரமாட்டேன். அவருக்கு எம்.பி என்ற பொறுப்பை நீங்கள் வழங்க வேண்டும். பாஜகவின் வெற்றி என்பது, சேவை செய்யாமல் வாய் பேச்சு பேசிய எம்.பி ஜோதிமையை வீட்டுக்கு அனுப்பும் போது தெரியும். நீர் பாசன வசதி, விவசாயிகள் பிரச்சனை, தொழிற்சாலை பிரச்சனை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லை என பல பிரச்சனைகள் இந்த தொகுதியில் உள்ளது. 

திமுக தேர்தல் அறிக்கையை கசக்கி வீசி விட வேண்டும். 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற அனைத்தும், 33 மாதங்கள் கடந்து பாராளுமன்ற தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது. அழித்து அழித்து திருப்பி அதே வாக்குறுதிகளை எழுதி இருக்கிறார்கள். அது ஒரு பொய் புத்தகம். 511 தேர்தல் வாக்குறுதிகளில், 20 கூட நிறைவேற்றாமல் 99 சதவீதம் நிறைவேற்றியதாக ஸ்டாலின் கூறுகிறார். 

தேர்தல் அறிக்கை குறித்து ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கரூரில் ஒரு அமைச்சர் இருந்தார் தற்போது அவர் சிறையில் இருக்கிறார். தவறு செய்ததால் சிறைக்கு சென்றவர், உள்ளே இருந்து கொண்டே பகுதி மக்களுக்கு டப்பா கொடுத்துள்ளார். மேலும், தேர்தல் சமயத்தில் வெள்ளி இல்லாத கொலுசு, டோக்கன் கொடுக்க வருவார்கள். நமக்கு இலவசங்கள் தேவையில்லை. வளர்ச்சி தான் தேவை.

அதிமுக இந்த தேர்தலில் எதற்காக நிற்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களை கேட்டால் பிரதமரிடம் வலியுறுத்துவதற்காக நிற்கிறோம் என்று சொல்கிறார்கள். இந்த தேர்தலில் திமுகவுக்கும், பாஜகவுக்கும் தான் போட்டி என்று மக்களுக்கு நன்றாக தெரியும். கடந்த 10 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காமல் பிரதமர் மோடி மக்கள் பணி செய்து வருகிறார். பாஜக மாப்பிள்ளை வீடு, கூட்டணி கட்சியினர் பெண் வீடு என்பது போல், கூட்டணி கட்சி நண்பர்கள் நமக்குள் இருக்கும் சிறு சலசலப்புகளை பெரிது படுத்தாமல், ஒரே குடும்பமாக இருந்து தேர்தல் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்றார்.

Video Top Stories