TN Rain : தூத்துக்குடி.. மதுரை.. கொட்டித்தீர்த்த பேய் மழை.. வெள்ளக்காடாக மாறிய சாலைகள் - மக்கள் அவதி! Video!
TN Rain Update : தமிழகத்தில் பரவலாக கோடை மழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில், இன்று மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து, சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
மதுரை மாநகர் பகுதியில் கனமழை பெய்துவருகிறது. மாநகரின் முக்கிய பகுதிகளான மாட்டுத்தாவணி, அண்ணாநகர், தெப்பக்குளம், வண்டியூர், செல்லூர், சிம்மக்கல், கோரிப்பாளையம், கே புதூர், மூன்றுமாவடி, தபால் தந்தி நகர், ஆரப்பாளையம். பொன்மேனி உள்ளிட்ட மாநகர் பகுதிகள் முழுவதும் கனமழை பெய்துவருகிறது.
அரை மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்ததால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்பதால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்ட நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுவருகிறது.
மதுரை தத்தனேரி, பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் மற்றும் ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதை முழுவதிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் சுரங்கப்பாதை போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் சென்று வருகின்றன. அதே போன்று புறநகர் பகுதிகளான அலங்காநல்லூர், பரவை, சமையநல்லூர், கருப்பாயூரணி, ஒத்தக்கடை, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துவருகிறது.