Watch : அதிமுக திட்டங்களை ஒவ்வொன்றாக திமுக அரசு ரத்து செய்கிறது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம்!
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டதற்க்காக திமுக மக்களை வஞ்சித்து வருவதாக மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
மதுரை மாவட்டத்தில் அதிமுக ஆட்சி காலகட்டத்தில் நிர்வாக வசதிக்காக உசிலம்பட்டி கல்வி மாவட்டத்திலிருந்து திருமங்கலத்தை வைத்து புதிய கல்வி மாவட்டம் உருவாக்கி மொத்தமாக 4 கல்வி மாவட்டமாக செயல்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழக அரசு உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 2 கல்வி மாவட்டங்களை ரத்து செய்து மேற்க்கண்ட 2 கல்வி மாவட்டங்களை மேலூர் கல்வி மாவட்டத்துடன் இணைந்து அரசானை பிறப்பித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர், ஏறத்தாழ 20 நிமிடங்கள் போராட்டம் நீடித்த நிலையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரை சந்திக்க அழைத்து சென்றனர்.
மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் "அதிமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நிர்வாக வசதிக்காக 52 புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது, புதிய கல்வி மாவட்டங்களால் மாணவர்களுக்கு 14 வகையான் நலத்திட்ட உதவிகள் விரைவாக வழங்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய இடங்களில் இருந்த 2 கல்வி மாவட்டங்கள் ரத்து செய்யப்பட்டு மேலூர் கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது, தாலிக்கு தங்கம், குடிமராமத்து திட்டம், பச்சிளம் குழந்தைகள் பரிசு பெட்டகம் உள்ளிட்டு அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் ஒவ்வொன்றாக திமுக அரசு ரத்து செய்து வருகிறது.
அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் தொடங்கிய காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சிந்தனையில் உருவானது போது தற்போது திறந்து வைத்து உள்ளார், 58 ஆம் கால்வாயில் தண்ணீரை திறக்காமல் விவசாயிகளை திமுக வஞ்சித்து வருகிறது. இரட்டை இலைக்கு ஒட்டு போட்டதற்க்காக திமுக மக்களை வஞ்சித்து வருகிறது, தமிழக அரசு என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவான அரசாக செயல்பட வேண்டும், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தது போல புதிய கல்வி மாவட்டங்கள் செயல்படவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்" என கூறினார்