Viral Video : எரிவாயு குழாயில் உடைப்பு! சாலையில் பொங்கிய சேறும் சகதியும்!
கோவை சேரன் மாநகர் பகுதியில் எரிவாயு குழாய் அமைக்கும் பணியின் போது, திடீரென உடைப்பு ஏற்பட்டதில் 4 மாடி உயரத்திற்கு சேறும் சகதியும் தூக்கி வீசப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகருக்கு எரிவாயு விநியோகத்தை செயல்படுத்துவதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பேஷன் நிறுவனம் குழாய் அமைக்கும் பணி மற்றும் சோதனை ஓட்டங்களை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், சேரன் மாநகர் தண்ணீர் பந்தல் சாலையில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த எரிவாயு குழாயில் உடைப்பு ஏற்பட்டு சேறும் சகதியும் பல அடி உயரத்திற்கு எழும்பியது. இதைத்தொடர்ந்து வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், எரிவாயு குழாய் பதிப்பு பணிகளை மேற்கொண்டு வந்த ஐஓசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்த குழாய் கட்டமைப்பில் காற்று மற்றும் நீரைச் செலுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தான் என்றும், மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.