பெருங்களத்தூர் மெயின் ரோட்டில் மீண்டும் முதலை..! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்-வெளியான வீடியோ

சென்னை மழை பாதிப்பின் போது பெருங்களத்தூர் சாலையில் பெரிய அளவிலான முதலை வெளியே வந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டி ஒருவர் உயிர் தப்பிய நிலையில், மீண்டும் அதே பகுதியில் குட்டி முதலை சாலையில் நடமாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First Published Jan 2, 2024, 9:41 AM IST | Last Updated Jan 2, 2024, 9:41 AM IST

சென்னை சாலையில் முதலை

சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பின் போது ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது  புறநகர் பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பியதால் பாதுகாப்பிற்காக ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக பாம்பு, பூச்சிகள் வெளியே வரும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது  சென்னை பெருங்களத்தூர்- நெற்குன்றம் சாலையில் மிகப்பெரிய அளவிலான முதலை சாலையை கடந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை காரில் இருந்து ஒருவர் படம் பிடித்துள்ளார். மேலும் அந்த முதலையை கவனிக்காமல் உணவு டெலிவரி ஊழியர் கிராஸ் செய்கிறார். அதிர்ஷடவசத்தால் அந்த ஊழியர் உயிர் தப்பித்தார். இதனை அடுத்து ஒரு சில தினங்களுக்கு பிறகு அந்த முதலை பிடிக்கப்பட்டு கிண்டி பூங்காவில் அடைக்கப்பட்டது.  

இந்தநிலையில் தற்போது மீண்டும் ஒரு குட்டி முதலை சாலையில் நடமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. 2 அடி உயரம் கொண்ட அந்த முதலை பெருங்களத்தூர் சாலையில் சுற்றி திரிந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் பரவி வரும் நிலையில், அந்த முதலையை வனத்துறையினர் மீட்டு கிண்டி பூங்காவில் அடைத்துள்ளனர்.