Arrest : பட்டாகத்தியோடு பர்த்டே கொண்டாட்டம்.! நெருப்பு பறக்க காரில் ரேஸ்- ரவுடிக்கு மாவு கட்டு போட்ட போலீஸ்
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பட்டாகத்தியால் கேக் வெட்டியும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கத்தியை தரையில் தேய்து நெருப்பு வரும் வகையில் சாலையில் கார் ரேஸில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் தட்டி துக்கியுள்ளனர்.
பட்டா கத்தியோடு பிறந்தநாள் கொண்டாட்டம்
சட்ட விரோத செயல்களை தடுக்கும் வகையில் குற்றச்சம்பங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கண்காணித்து கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் தான் மிகப்பெரிய ரவுடி என வெளியில் தம்பட்டம் அடித்துக்கொள்ள பட்டா கத்தியோடு பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.இந்த நிலையில் சென்னை ஈசிஆர் பனையூர் அருகே ரவுடி எழிலரசன் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
அப்போது கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்து கேக் வெட்டப்பட்டது. அப்போது மது போதையில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக கார் மற்றும் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியும், காரில் இருந்தப்படியே கத்தியை தரையில் தேய்தப்படியே சென்ற வீடியோ வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது .
ரவுடிக்கு மாவுகட்டு
இது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்த நிலையில் ரவுடி எழிலரசன் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் சைதாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்டபட்ட ஆடுதொட்டி பாலம் அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று (24.07.2024) சைதாப்பேட்டை காவல் குழுவினர் சைதாப்பேட்டை ஆடுதொட்டி பாலம் அருகில் சந்தேகப்படும்படி இருந்த 5 நபர்களை போலீசார் பிடிக்க முற்பட்டபோது, அந்த நபர்கள் ஓடவே, போலீசாரும் விரட்டி சென்று 4 நபர்களை மடக்கிப்பிடித்தனர்.
இதில் எழிலரசன் என்பவர் பாலத்திலிருந்து கீழே விழுந்தபோது, இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பிடிபட்ட 4 நபர்களை விசாரணை செய்து சோதனை செய்ததில் அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 4 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.