ராணிபேட்டையில் பாத்திரத்தில் தலையை விட்டு மாட்டிக்கொண்ட குழந்தை
ராணிபேட்டை மாவட்டம் விசாலாட்சி நகர் பகுதியில் வீட்டில் உள்ள பாத்திரங்களைக் வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்ட சில்வர் பாத்திரத்தில் இருந்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
ராணிபேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை விசாலாட்சி நகர் பகுதியை சேர்ந்த ஜோனத் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றார். இவரது ஒன்றரை வயது மகன் ஜோவித் வீட்டில் தலையில் பாத்திரத்தை மாட்டி விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது சில்வர் பாத்திரத்தில் தலை மாட்டிக்கொண்டு வெளியில் வராமல் தவித்துள்ளான். பின்னர் அவனது பெற்றோர் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டி கொண்ட பாத்திரத்தை குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெட்டி எடுத்தனர். பின்னர் குழந்தையை பாதுகாப்பாக அவரது பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.