பைக்கை அலேக்காக தூக்கி சென்ற போலீசார்.. மது அருந்தாத இளைஞர் மீது தாக்குதல் - திடீர் மறியலால் பரபரப்பு
ஜோலார்பேட்டையில் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற போலீசாரை கண்டித்து குடும்பத்துடன் சாலை மறியல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கனம்பட்டி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் குகன் (25). இவர் நள்ளிரவில் ஜோலார்பேட்டையில் 24 மணி நேரம் இயங்கி வரும் தனியார் பேக்கரியில் டீ குடிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த போலீசார், குகனின் பைக் சாவியை வாங்கிக் கொண்டு, காலையில் ஸ்டேஷனில் வந்து பைக்கை வாங்கிக் கொள் எனக் கூறியுள்ளனர். இதைக் கேட்ட குகன், ‘நான் மது அருந்த வில்லை. வாகனத்தை வேகமாகவும் இயக்க வில்லை. என்னுடைய ஊர் பெயரைக் கேட்டீர்கள். நான் கூறினேன். அதற்காக என் பைக்கை பறிமுதல் செய்வது எதற்காக?’ எனக் கேட்டுள்ளார்.
இதைக் கேட்ட போலீசார், குகனின் சட்டையை பிடித்து அவரைத் தள்ளி விட்டு, பைக்கை எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. இதைத் தொடர்ந்து இன்று வக்கனம்பட்டி அருகே வாணியம்பாடி திருப்பத்தூர் செல்லும் சாலையில் குகனின் குடும்பத்தார் 10க்கும் அதிகமானவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அந்தக் குடும்பத்தார், மறியலைக் கைவிட மறுத்து, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அப்போது எஸ்பியை மரியாதை நிமித்தம் சந்திப்பதற்காக வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார் அந்த வழியாக வந்தார். அவர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் மறியலைக் கைவிட்டனர். இது குறித்து குகன் கூறுகையில், ‘நான் மது குடிக்கவில்லை. வேகமாகவும் செல்லவில்லை. அந்த பேக்கரி 24 மணி நேரம் இயங்குகிறது. அங்கு சென்று டீ குடிக்கச் சென்ற என் பைக்கை பறிமுதல் செய்தனர்.
இதனால் நான் அரசு ஆஸ்பத்திரிக்கு மது அருந்தியுள்ளேனா? என்ற சோதனை மேற்கொள்ளச் சென்ற போது, அங்கிருந்த நர்ஸ், போலீஸ் உடன் வந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படும் எனக் கூறினர். நான் குடித்திருந்தால், அங்கு சென்றிருப்பேனா? போலீசார் என் சட்டையை பிடித்து, அசிங்கப்படுத்தியது ஏன்? என் ஊரைச் சொன்னதும் பைக்கை பறிமுதல் செய்தனர். அப்படி என்றால், என் ஊர் மக்கள் அவ்வளவு கேவலமானவர்களா?’ என்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.