தொடர் மழையால் களையிழந்த எட்டயபுரம் ஆட்டுச் சந்தை!
புகழ்பெற்ற ஆட்டுச் சந்தைகளில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச் சந்தை தொடர் மழையால் சந்தை களையிழந்துள்ளது. தீபாவளிக்கு ஆடு விற்பனை சரியாக ஆகாததால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.
தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தைகளில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச் சந்தை . ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தைக்கு சென்னை, கோவை ,மதுரை, சிவகங்கை தேனி ராமநாதபுரம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருவது வழக்கம். சாதாரண நாட்களில் 1 கோடி ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரையும் ஆடுகள் விற்பனை நடைபெறும்.
பண்டிகை காலங்களில் 3 கோடி ரூபாய் முதல் 8 கோடி ரூபாய் விற்பனை நடைபெறுவது வழக்கம். கடந்த சில வாரங்களாக எட்டயபுரம் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆட்டுச்சந்தை வியாபாரம் மந்தமாக இருந்தது. இருந்த போதிலும் நாளை தீபாவளி பண்டிகை என்பதால் வியாபாரம் களை கட்டும் என்று கால்நடை வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் எதிர்பார்த்து இருந்த நிலையில், நேற்று மாலை முதல் எட்டயபுரத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. மேலும் இரவிலும் மழை நீடித்த காரணத்தினால் சந்தைக்கு ஆடுகள் வரத்து மிகவும் குறைவாக இருந்தது.
வழக்கமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் வரும் நிலையில் இன்று 40 சதவீதம் ஆடுகள் மட்டுமே வந்தது. அதே போன்று வெளியூர் வியாபாரிகளும் குறைவாக இருந்தனர். ஆடுகள் விலை சற்று விலை குறைவு என்றாலும், ஆடுகள் விற்பனை மிக குறைவாக இருந்தது. மழையின் காரணமாக இந்தாண்டு தீபாவளி விற்பனை மிகவும் மந்தமாக இருந்தது. கடந்த ஆண்டு 7 கோடி ரூபாய் விற்பனையான நிலையில் இந்தாண்டு 2 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு தான் விற்பனையாகி உள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியூர் வியாபாரிகள் வரத்து குறைவு காரணமாக தான் விற்பனை இல்லை என்றும், கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை நன்றாக இருந்தது என்றும், ஆனால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு விற்பனை மிக குறைவும் என்றும், மழையினால் தான் விற்பனை இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.