VIDEO | தரமற்ற முறையில் இருப்பு வைத்திருந்த 15000 டன் மக்காசோளம்! ரிலையன்ஸ் குடோனுக்கு சீல் !
தூத்துக்குடியில் சுகாதாரமற்ற முறையில் சுமார் 15000 டன் மக்காசோளத்தை இருப்பு வைக்கப்பட்டிருந்த ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு உரிமத்தையும் ரத்து செய்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு குடோனில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 15 ஆயிரம் டன் மக்காச்சோளம் ஏற்றுமதி செய்வதற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த மக்காச்சோளத்திற்கு உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் ஏற்றுமதி உரிமத்தை தூத்துக்குடியை சேர்ந்த ஆஸ்பின் வால் என்ற தனியார் ஷிப்பிங் நிறுவனம் மேற்கொண்டு இருந்தது
இந்நிலையில் இந்த குடோனில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான மூடைகளில் வைக்கப்பட்டிருந்த இந்த மக்காச்சோளங்கள் சுகாதாரமற்ற முறையில் வண்டு பூச்சிகள் நிறைந்ததாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூபாய் 20 கோடி மதிப்பிலான 15000 டன் மக்காச்சோளம் வைக்கப்பட்டுள்ள குடோனை பூட்டி சீல் வைத்ததுடன், உணவு பாதுகாப்பு உரிமைத்தையும் ரத்து செய்தனர். மேலும் குடோனில் இருந்து ஆய்வுக்காக மக்காச்சோளத்தை எடுத்துச் சென்றுள்ள அதிகாரிகள் ஆய்வு முடிவுக்கு பின்பு சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துள்ளனர்
மேலும் உணவு பொருட்களை தேக்கி வைக்கும் வியாபாரிகள் உணவு பாதுகாப்பு தர சட்ட விதிகளின்படி, பாதுகாப்பு முறைகளை கையாள விட்டால் உணவு பாதுகாப்பு சட்டம் 2006-ன்படி சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.