Asianet News TamilAsianet News Tamil

மாட்டு வண்டி, பறையாட்டம் என பாரம்பரிய சாயலில் கலைகட்டிய பொங்கல் விழா; திருவாரூரில் கோலாகலம்

திருவாரூரில் மாட்டு வண்டி மற்றும் பறையாட்டத்துடன் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மண் பானையில் பொங்கலிட வலியுறுத்தி ஊர்வலமாக வந்து கொண்டாடிய பொங்கல் விழா. தனியார் கல்லூரியில் கலைகட்டியது.

திருவாரூர் அருகே உள்ள சேந்தமங்கலத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கலை கல்லூரி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இதனை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கையில் கரும்பு உள்ளிட்ட பொங்கல் வைக்க தேவையான பொருட்களுடன் ஊர்வலமாக வந்து கல்லூரியில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

சேந்தமங்கலம் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் பறை இசை கரகாட்டம் மயிலாட்டம் என ஒரு கிலோ மீட்டர் தூரம் நடைபெற்று கல்லூரி வளாகத்தை வந்தடைந்தது.மாணவ மாணவிகள் குத்தாட்டம் போட்டபடி இந்த ஊர்வலத்தில் பங்கு பெற்றனர்.இந்த ஊர்வலத்தில் கீழக்காவதுகுடி ஊராட்சி மன்ற தலைவர் கலைக்கோவன் திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடக்கி வைத்தார்.

குறிப்பாக தமிழர் பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கலிட்டு அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ஒரு கிலோமீட்டர் தூரம் மாணவ மாணவிகள் ஊர்வலமாக வந்து இந்த சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடுவதாக கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Video Top Stories