முதல்வரோட சொந்த ஊர்ல ஆஸ்பத்திரி இவ்ளோ மோசமா இருக்கு - பொதுவெளியில் அதிகாரியை அலரவிட்ட வேல்முருகன்
திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதிகாரிகளை கண்டித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். இன்று காலை முதல் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த பொழுது மருத்துவமனை முழுவதும் கழிவுநீர் தேங்கி இருப்பதாகவும், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவதால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதாக சட்டமன்ற குழுவினரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
அதனை அடுத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களின் மேலாளரிடம் ஏன் கழிவுநீரை அகற்றவில்லை? மருத்துவமனையை தூய்மையாக வைக்கவில்லை? தமிழக முதல்வரின் சொந்த மாவட்டத்தில் இதே போன்ற நிலையா என கோபத்துடன் சட்டமன்ற குழு தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினர். அவசர சிகிச்சை பிரிவில் உள்ள குளிர்சாதன பெட்டிகள் வேலை செய்யவில்லை அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைத்தையும் சரி செய்து விட்டு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என தெரிவித்துவிட்டு அங்கிருந்து சட்டமன்ற குழு உறுப்பினர்கள் புறப்பட்டனர்.
இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.