ஆபத்தான நிலையில் அரசு பேருந்துகள்: உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் - முதல்வரின் சொந்த ஊரில் அவலம்!
முதல்வர் ஸ்டாலினின் சொந்த ஊரில் ஆபத்தான நிலையில் உள்ள அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது
துண்டு போட்டு கட்டி வைக்கப்பட்ட கதவு, ஆடிக்கொண்டிருக்கும் படிக்கட்டுகள், கிழிந்த இருக்கை, தலைக்கு அருகில் பிய்ந்து தொங்கும் மின் வயர் என தஞ்சாவூரில் இருந்து திருவாரூருக்கு செல்லும் அரசு பேருந்துகளின் நிலை இருக்கிறது.
தஞ்சாவூரில் இருந்து திருவாரூருக்கு செல்லக்கூடிய அரசு பேருந்தின் கதவு திறந்து மூட முடியாமல் துண்டு போட்டு கட்டப்பட்டுள்ளது. இருக்கைகள் கிழிந்து தொங்குகின்றன. படிக்கட்டு தடதட தடவென ஆடிக்கொண்டே இருக்கிறது. ஜன்னல் கம்பிகள் துருப்பிடித்து ஆபத்தான நிலையில் உள்ளன. மேலும் இருக்கைகளில் கை வைக்க பயன்படுத்தப்படும் கம்பிகளும், கயிறு கொண்டு மற்றொரு கம்பியில் இறுக்கி கட்டப்பட்டுள்ளது.
பேருந்துகளில் வெளிச்சம் வருவதற்காக லைட்டுக்களுக்கு செல்லும் மின் ஒயர்கள் அறுந்த நிலையில் பிய்ந்து தொங்கிக் கொண்டுள்ளன. பேருந்துகளில் நிற்கும் பயணிகளின் தலையை தொடும் வகையில் இந்த மின் வயர்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. முதல்வரின் சொந்த ஊரான திருவாரூரில் ஆபத்தான நிலையில் பயணிகள் உயிரை கையில் பிடித்தபடி அரசு பேருந்துகளில் பயணம் செய்து வருவது கவனம் ஈர்த்துள்ளது.