நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள்; கைக்குழந்தையுடன் களத்தில் இறங்கி போக்குவரத்தை சரி செய்த காவலர்

திருவாரூரில் கைக்குழந்தையுடன் சாலையில் இறங்கி போக்குவரத்து நெரிசலை சரி செய்த போக்குவரத்து காவலருக்க பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.

First Published Feb 13, 2024, 2:52 PM IST | Last Updated Feb 13, 2024, 3:03 PM IST

திருவாரூர் நகரின் முக்கிய நுழைவு வாயில் பகுதியாக இருந்து வருவது திருச்சி - நாகை தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் உள்ள விளமல் கல்பாலம் பகுதி. இந்த வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் திருவாரூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் விஜயபுரம் பகுதியில் வணிக வளாகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிக்காக திருவாரூர் பழைய பேருந்து நிலைய பாதையை முழுவதுமாக நகராட்சி நிர்வாகம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அடைத்துள்ளது.

திருவாரூர் நகராட்சியின் இத்தகைய  நடவடிக்கையால் திருவாரூர் நகரின் மைய பகுதிக்குள் நுழையும் கனரக வாகனங்கள், நான்குசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் விளமல் கல்பாலம் அருகே உள்ள பாலம் வழியாக செல்லவேண்டிய நிலை உள்ளது. இதனால் திருச்சி - நாகை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. 

இத்தகைய சூழலில் தைமாத இறுதி முகூர்த்தநாள் மற்றும் பல்வேறு ஆலயங்கள் குடமுழுக்கு நாளான நேற்று திருச்சி - நாகை தேசிய நெடுஞ்சாலை விளமல் கல்பாலம் அருகில் சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது தவிர மன்னார்குடி சாலை மார்க்கமாக திருவாரூர் நகருக்கு வரும் வாகனங்கள் என திருச்சி - நாகை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  

வழக்கமாக விளமல் கல்பாலம் அருகில் போக்குவரத்தை சரி செய்வதற்காக போக்குவரத்து காவலர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்கு அங்கு யாரும் பணியில் இல்லை. இந்நிலையில் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரியும் மணிகண்டன் என்பவர் தனது பணியை காலை முடித்துவிட்டு பின்னர் தனது வீட்டில் இருந்து தனது 1 வயது கூட நிரம்பாத கை குழந்தையுடன் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க விளமல் பகுதிக்கு வந்தபோது போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் வாகனங்களில் அவதியுற்று வந்ததை கண்டார்.  

அப்போது தனது கையில் இருந்து கை குழந்தையும்  பொருட்படுத்தாமல் சுமார் அரை மணி நேரம் சாலையில் நின்று காவலர் மணிகண்டன் திருச்சி - நாகை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் அணிவகுந்து நின்றிருந்த வாகங்களை ஒன்றன் பின் ஒன்றாக இயக்கி போக்குவரத்து நெரிசலை சரி செய்தார். கை குழந்தையோடு காவலர் மணிகண்டன் சாலையின் இருபுறமும் மாறி மாறி வாகனங்களை இயக்கி போக்குவரத்தை சரிசெய்த காட்சியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே காவலர் மணிகண்டனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் அழைத்து அவருக்கு பொன்னாடை அணிவித்து பரிசளித்து பாராட்டு தெரிவித்தார்.

Video Top Stories