தக்காளி சாதத்தில் இருந்த இரும்பு கம்பி; நியாயம் கேட்ட வாடிக்கையாளரை மிரட்டி அனுப்பிய உரிமையாளர்

திருவாரூரில் தனியார் உணவகத்தில் வாங்கப்பட்ட உணவில் ஸ்டேப்லர் பின் இருந்த நிலையில், இது தொடர்பாக நியாயம் கேட்ட நபரை உணவக உரிமையாளர் மிரட்டி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அழகிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்..இவர் திருவாரூர் அருகே உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவரது தாய் மகாலட்சுமி தீபாவளிக்கு முந்தைய நாள் திருவாரூர் பழைய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ கணேஷ் ஹோட்டலில் தக்காளி சாதம் பார்சல் ஒன்றை தனது மகனுக்காக வாங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தக்காளி சாதத்தை பிரித்து சந்தோஷ் சாப்பிட்ட போது அதில் ஸ்டாப்லர் பின் இருந்துள்ளது. இதனையடுத்து தனது அம்மாவிடம் எந்த கடையில் வாங்கியது என்பதை விசாரித்து விட்டு அந்த கடைக்கு சாப்பாடு பொட்டலத்துடன் சென்று உரிமையாளரிடம் அதை காட்டி அவர் நியாயம் கேட்டுள்ளார். அதற்கு உரிமையாளர் தங்கள் கடையில் பின் எல்லாம் கிடையாது என்று கூறி சாப்பாடு பொட்டலத்தை குப்பைத் தொட்டியில் போட்டதுடன் சந்தோஷை தரக்குறைவாக பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனை வீடியோவாக எடுத்த சந்தோஷ் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இது குறித்து சந்தோஷ் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஹோட்டல் உரிமையாளர் தன்னை தரக்குறைவாக பேசி தாக்கியதாக புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Video