திருவாரூரில் அரசுப்பேருந்து நடத்துநர் மீது கொலைவெறி தாக்குதல்; கல்லூரி மாணவர்கள் கைது

திருவாரூரில் அரசுப் பேருந்தில் ஆபாசமாக பேசிக்கொண்டு சண்டையிட்டு வந்தவர்களை தட்டிக்கேட்ட நடத்துநரை கடுமையாக தாக்கிய கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

First Published Dec 15, 2023, 11:18 AM IST | Last Updated Dec 15, 2023, 11:18 AM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு அரசு பேருந்தை ஓட்டுநர் மகேந்திரன் என்பவர் இயக்கி வந்துள்ளார். புதிய பேருந்து நிலையத்தில் ஏறிய கல்லூரி மாணவர்கள் சிலர் தங்களுக்குள் வாக்குவாதம் செய்துகொண்டும், ஆபாசமாக பேசிகொண்டும் வந்துள்ளனர். இது மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருந்துள்ளது. 

இந்நிலையில் தண்டலைச்சேரி பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்த போது பேருந்தின் உள்ளே இருந்த கல்லூரி மாணவர்கள் சிலர் தகாத வார்த்தையால் சத்தம் போட்டு வந்துள்ளனர். இதனை பேருந்து நடத்துநர் பக்கிரிசாமி (வயது 51) இதனை  கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர்கள் பேருந்தில் இருந்து நடத்துநரை கீழே தள்ளிவிட்டு தாக்குதல் நடத்தினர். 

இதில் பேருந்து நடத்துநர் பக்கிரிசாமி தலையில் காயம் ஏற்பட்டு  ரத்தம் வழிந்தது. இதைத் தொடர்ந்து நடத்துநர் உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் தப்பி ஓடிய மாணவர்கள் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் நடத்துநரை தாக்கியதாக கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Video Top Stories