திருமூர்த்தி அணையில் இருந்து 4ம் மண்டல பாசனத்திற்கு மீண்டும் தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து 4ம் மண்டல பாசனத்திற்காக இரண்டாம் சுற்றாக இன்று மீண்டும் அணை திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

First Published Dec 16, 2023, 6:42 PM IST | Last Updated Dec 16, 2023, 6:42 PM IST

உடுமலை திருமூர்த்தி அணை மூலம் பிஏபி பாசன திட்டத்தில், திருப்பூர்,  கோவை  மாவட்டங்களில் உள்ள 3.77  லட்சம் ஏக்கர் நிலங்கள்  பாசன வசதி பெறுகின்றன.மேலும், உடுமலை நகராட்சி, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, 48.39 கி.மீ., தூரம் அடர்ந்த வனப்பகுதிகளில் மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள காண்டூர்  கால்வாய் மூலம், திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு சேமிக்கப்படுகிறது. பிரதான கால்வாய் மூலம் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, பாசன நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

திருமூர்த்தி அணையிலிருந்து, நான்காம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட, 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்களில் நிலைவையில் உள்ள பயிர்களை காப்பாற்றவும், கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் செப் 20 முதல் வரும் அக்.11 முடிய 21 நாட்களுக்கு  2 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியதையடுத்து, தண்ணீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.

இந்நிலையில், பாசன பகுதிகளில், கடும் வறட்சி நிலவுகிறது. நிலைப்பயிர்கள் காப்பாற்றவும், கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட , விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனையடுத்து, திருமூர்த்தி அணையிலிருந்து, நான்காம் மண்டல பாசன நிலங்களுக்கு, இரண்டாம் சுற்றுக்கு இன்று முதல் (டிச.,16), வரும் ஜனவரி 6ம் தேதி வரை 21 நாட்களுக்கு இரண்டு ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனங்களுக்கு, இரண்டாம் சுற்றுக்கு, தண்ணீர் திறக்கப்பட்டது. திருமூர்த்தி அணையில், இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம்  மொத்தமுள்ள 60 அடியில் 47.45 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 661 கன அடியாகவும் இருந்தது.

Video Top Stories