உடுமலை போடிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மலை போல் குவிந்துள்ள குப்பை; பொதுமக்கள் அச்சம்

உடுமலை அருகே போடிப்பட்டி பேருந்து நிறுத்தத்தை ஒட்டி குப்பைகள் மலை போல் குவிந்துள்ளதால் மழை நீருடன் கலந்து பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

First Published Nov 29, 2023, 6:28 PM IST | Last Updated Nov 29, 2023, 6:28 PM IST

உடுமலை அடுத்த போடிப்பட்டி ஊராட்சியில் திருமூர்த்திமலை, அமராவதி, மூணாறு உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. தினசரி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கடந்து செல்லும் இந்த சாலையின் ஓரத்தில் மலை போல குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் குப்பைகளுடன் மழைநீர் கலந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைக் கழிவுகளில் மழைநீர் தேங்கி டெங்கு, மலேரியா உள்ளிட்ட ஆபத்தான நோய்களைப் பரப்பும் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. 

அத்துடன் குப்பைக் கழிவுகளில் உள்ள உணவுப் பொருட்களைத் தேடி கால்நடைகள் மற்றும் நாய்கள் அந்த பகுதியில் சுற்றுவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. குப்பைகளில் உள்ள பாலிதீன் கழிவுகள் கால்நடைகளின் உயிருக்கு எமனாகும் நிலையும் உள்ளது. குப்பைகளால் துர்நாற்றம் ஏற்பட்டு மூக்கை பிடித்துக் கொண்டே பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. 

அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் துர்நாற்றத்தால் அவதிப்படுவதுடன் பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கும் ஆளாகின்றனர். எனவே குப்பைத் தொட்டி வைத்து குப்பைகளை சேகரித்து உரிய நேரத்தில் அப்புறப்படுத்தவும் போடிபட்டி ஊராட்சி மன்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Video Top Stories