பிறந்து 1 மாதமேயான பச்சிளம் குழந்தையை பேருந்து நிலையத்தில் தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

திருப்பூர் பேருந்து நிலையத்தில் பிறந்து 1 மாதமே ஆன பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற இளம் பெண் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First Published Feb 16, 2024, 6:43 PM IST | Last Updated Feb 16, 2024, 6:43 PM IST

வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் சிற்றுண்டி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் இன்று காலை தனது சொந்த ஊருக்கு செல்ல திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பேருந்துக்காக காத்திருந்த நிலையில் அருகில் நின்றிருந்த 19 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சிறிது தயக்கத்துடன் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். 

இதனால் அருகில் உள்ள கழிவறைக்கு சென்று வரும் வரை குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு குழந்தையை செல்லம்மாளிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். குழந்தையை குடுத்துவிட்டு சென்ற பெண் மீண்டும் வரவில்லை. காலை 8:30 மணிக்கு குழந்தையை வாங்கிய செல்லம்மாள்  11:30 வரை மணி வரை இளம் பெண்ணுக்காக காத்திருந்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் நடந்ததை விளக்கியுள்ளார். பின்னர் அப்பெண்ணை பேருந்து நிலையத்தில் உள்ள தெற்கு புற காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தகவல் அறிந்த ஆய்வாளர் கணேஷ்குமார், உதவி ஆய்வாளர் பிச்சையா உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை என்பது தெரிய வந்தது. மேலும் அங்குள்ள சி.சி.டிவி கேமராவை  ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

பின்னர் அக்குழந்தை பராமரிப்பிற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது.