100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பு; திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்டத்தில் முறையாக சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதை கண்டித்தும், தீபாவளிக்கு முன்னதாக சம்பளம் வழங்க வலியுறுத்தியும் திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Share this Video

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் மடத்துக்குளம் வட்டார பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கடந்த காலங்களில், 100 நாள் வேலை திட்டத்தின் மூலமாக பணி செய்த பணியாளர்களுக்கு, கடந்த 14 வாரங்களுக்கும் மேலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் சம்பளத்தொகை வரவு வைக்காமல் இழுத்தடிப்பு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் மற்றும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் மாநில மையக் குழு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆகியோர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படாத சம்பளத் தொகையை தீபாவளிக்கு முன்பாகவே வரவு வைக்க வேண்டும் எனவும், மேலும் தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தை மடத்துக்குளம் வட்டார பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், தொடர்ந்து நடைமுறைப்படுத்திட வேண்டும் எனவும், கோரிக்கை விடுத்தனர். அப்போது கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Video