திருப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை; ஆய்வுக்கு சென்ற மேயரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
திருப்பூரில் கனமழை பெய்து வரும் நிலையில் மழை நீர் தேங்கய பகுதிகளை ஆய்வு செய்த மேயரை குடியிருப்புவாசிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் நேற்று மாலை கருமேகம் சூழ வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு சுமார் 10 மணி முதல் விடிய விடிய திருப்பூர் மாநகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து விடாது மழை பெய்தது. தொடர்ந்து திருப்பூர், அவிநாசி சாலை, காந்திநகர், புதிய பேருந்து நிலையம், எட்டாவது வார்டுக்கு உட்பட்ட மும்மூர்த்தி நகர் போன்ற பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் பொதுமக்கள் விடியும் வரை தூங்காமல் சிரமத்துக்கு உள்ளாகினர். தேங்கிய நீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து மாநகர ஆணையாளர், மாநகராட்சி மேயர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் குழு மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று காலை ஆய்வு செய்தனர். அப்பொழுது பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு மேயர் மற்றும் ஆணையாளரை பலமுறை மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று வீட்டை இழந்து வெளியே நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்து நீரை வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். மேயர் தினேஷ்குமார் மழைக்காலங்களில் திருப்பூர் மாநகருக்குள் இது போன்ற மழை நீர் தேங்குவதை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.