பல்லடம் அருகே தனியார் பஞ்சு மில்லில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!!
பல்லடம் அருகே தனியார் பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமமானது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பூமலூரில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு மில் இயங்கி வருகிறது. கடந்த ஒரு வருடமாக இந்த மில் இயங்கி வருகிறது. பனியன் துணிகளை பஞ்சாக மாற்றி நூற்பாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் பணியில் இருந்த ஊழியர்கள் மில்லில் இருந்த மோட்டாரை சுத்தம் செய்த பொழுது திடீரென மோட்டார் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
இதில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகளில் தீ மல மலவென பற்றி எரிந்தது. அதனை தொடர்ந்து இயந்திரங்களும் தீ பற்றியது.இது குறித்து பல்லடம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.தனியார் வாகனங்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமாகின. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.