Watch : பல்லடத்தில் செல்போன் கடை உரிமையாளரை தாக்கிய போதை கும்பல்! பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

பல்லடம் பேருந்து நிலையத்தில், மொபைல் கடை உரிமையாளர் மீது மது போதையில் இருந்து மர்ம ஆசாமிகள் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துதொடர்பான சிசிடிவி காட்சிகளும் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கையில் பலத்த காயங்களுடன் கடை உரிமையாளர் வினோத் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

First Published May 3, 2023, 4:33 PM IST | Last Updated May 3, 2023, 4:33 PM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் மதுரையை சேர்ந்த வினோத் என்பவர் கடந்த நான்கு மாதங்களாக மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இரவு 9 மணியளவில் இவரது கடைக்கு வந்த வாய் பேச முடியாத பெண் ஒருவர் மொபைலுக்கு சார்ஜ் போட தனது கைபேசியை கடையில் கொடுத்து விட்டு சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து வினோத்தின் கடைக்கு மதுபோதையில் வந்த நபர் ஒருவர் வாய் பேச முடியாத பெண் குறித்து கேட்டுள்ளார். திடீரென அந்த பெண் குறித்து ஆபாச வார்த்தைகளில் பேசியபடி கடையில் இருந்த வினோத் மற்றும் அவரது தம்பி முத்து ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.

மீண்டும் சிறிது நேரத்திலேயே ஆட்டோ ஓட்டுனர் மற்றொரு நபர் ஒருவருடன் வினோத்தின் கடைக்கு வந்த அந்த நபர் வெளியே வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை எடுத்து வினோத்தின் மீது சரமாரியாக தாக்கி கடையையும் அடித்து நொறுக்கி உள்ளார்.

மேலும் இதில் பலத்த காயம் அடைந்த கடை உரிமையாளர் வினோத், கையில் பலத்த காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வினோத் அளித்த புகாரின் பேரில் பல்லடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு நபர்களையும் சிசிடிவி காட்சிகள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடை உரிமையாளர் வினோத் மீது மர்ம ஆசாமிகள் இரண்டு பேர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video Top Stories