நேற்று பொள்ளாச்சி, இன்று காங்கேயம்; போதை பெண்ணின் தொடர் ரகளையால் வாகன ஓட்டிகள் எரிச்சல்
காங்கேயத்தில் போக்குவரத்து மிகுந்த சாலையில் பெண் ஒருவர் மதுபோதையில் வாகனங்களை நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் காண்போதை முகம் சுழிக்கச் செய்துள்ளது.
காங்கேயத்தில் இருந்து திருப்பூர் செல்லும் பிரதான சாலை எந்நேரமும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இச்சாலையில் நேற்று மாலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் வாகனங்களை மறித்தும், டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களை ஆபாச வார்த்தைகளால் வசை பாடிய படி உள்ளதாக காங்கேயம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு காவல் துறையினர் சென்றபோது அங்கு மதுப்பிரியையான பெண் டாஸ்மாக் கடையில் குடித்து விட்டு, போதை தலைக்கேறிய நிலையில் ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனடியாக அப்பெண்ணை காவல் துறையினர் அப்புறபடுத்த முயற்ச்சித்தனர். ஆனால் காவல் துறையினரின் முயற்சி பலனளிக்கவில்லை. காவல் துறையினரிடம் திமிறி சென்ற போதை பெண் அங்கு வந்த காரை நிறுத்தி காரின் சாவியை பிடிங்கி சென்றார். காரின் ஓட்டுநர் சாவியை கேட்டும் தராமல் அடம் பிடித்தார். மேலும் அவ்வழியாக வந்த அரசு பேருந்தை நிறுத்தி அதன் முன்பாக நின்று ரகளையில் ஈடுபட்டார்.
பின் சம்பவ இடத்திற்கு வந்த காங்கேயம் உதவி ஆய்வாளர் சந்திரன் தலைமையிலான கூடுதல் காவலர்கள் அவரை சமாதானம் செய்து லாவகமாக ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அப்பெண் திருப்பூரைச் சேர்ந்த மகேஷ்வரி என்பதும், கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுவிற்கு அடிமையானதும் தெரியவந்தது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் இதே பெண்தான் குடிபோதையில் பேருந்தை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. பின் காவல் துறையினர் அப்பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர். காங்கேயத்தில் குடிபோதையில் பெண் ஒருவர் வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.