திருப்பூரில் கல்லூரி பேருந்தில் லாரி மோதி 5 மாணவர்கள் உள்பட 6 பேர் படுகாயம்
திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்களை இறக்கி விடுவதற்காக சாலையோரம் நிறுத்தப்பட்ட கல்லூரிப் பேருந்தின் மீது லாரி மோதியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் - பொள்ளாச்சி சாலை பவர் ஹவுஸ் அருகே பொள்ளாச்சியில் உள்ள (நாச்சிமுத்து ) தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்தின் மீது பொள்ளாச்சியில் இருந்து கரூர் சென்ற கேரளா பதிவின் கொண்ட கனரக லாரி மோதியதில் தாராபுரத்தைச் சேர்ந்த மாணவர்கள் விக்னேஷ் (16), யஸ்வந்த் (17), தினகரன் (18), விஷ்ணு மூர்த்தி (21), மகுடீஸ்வரன் (19) ஆகிய 5 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
மேலும் லாரி கிளீனரும் விபத்தில் படுகாயமடைந்தார். விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காவல் துறையினர் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், லாரியின் ஓட்டுநர் தலிமோகன்(30) மது போதையில் வாகனத்தை ஓட்டியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.