Asianet News TamilAsianet News Tamil

25 வருசமா உங்களுக்குதான ஓட்டு போட்டோம்; திமுக கோட்டையில் அமைச்சருக்கு எதிராக மக்கள் ஆவேசம்

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யாமல் சென்ற அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிராக மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் பெய்த கனமழையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, கீதா ஜீவன் உள்ளிட்ட அமைச்சர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

இதனிடையே திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் வழியாக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு பணிகளுக்காக சென்று கொண்டு இருந்தார். அமைச்சரின் வருகையை அறிந்த அப்பகுதி மக்கள் சாலையில் குவியத் தொடங்கினர். அவ்வழியாக அமைச்சரின் கார் கடக்க முற்படுகையில் அதனை வழிமறித்த மக்கள் எங்கள் பகுதிக்குள் வந்து பாதிப்புகளை பார்வையிட்டு செல்லுங்கள் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அமைச்சரின் கார் அங்கிருந்து கடந்து செல்வதிலேயே முனைப்பு காட்டியது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் 25 வருசமா உங்களுக்கு தான ஓட்டு போட்டோம். எங்க பகுதிக்கு வந்து பாக்க முடியாதா? இனி உங்களுக்கு ஓட்டும் கிடையாது, ஒன்னும் கிடையாது என அமைச்சருக்கு எதிராக ஆவேசமாக பேசினார்.

மேலபாளையம் பகுதி பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியின் கீழ் வருகிறது. இந்த தொகுதியில் கடந்த 25 வருடங்களாக திமுகவைச் சேர்ந்தவர்கள் தான் எம்எல்ஏக்களாக பொறுப்பு வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories