Viral:நெல்லை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை!-பச்சிளம் குழந்தைகளுடன் தரையில் படுக்கும் தாய்மார்கள்

நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறையால், பிரசவமான பெண்கள் பச்சிளம் குழந்தைகளுடன் தரையில் படுக்கும் வீடியோ வைரலாகிறது
 

First Published Sep 23, 2022, 11:44 AM IST | Last Updated Sep 23, 2022, 11:44 AM IST

நெல்லை ஹைகிரவுண்டில் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் நெல்லை மட்டுமல்லாமல் தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி போன்ற அண்டை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக இங்கு நாள்தோறும் சராசரியாக மூன்றாயிரம் பேர் புற நோயாளிகளாகவும் 2000 பேர் வரை உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.

இதுபோன்ற சிறப்புகளைக் கொண்ட இந்த அரசு மருத்துவமனையில் சமீபகாலமாக சிகிச்சை அளிப்பதிலும் நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதிலும் மருத்துவமனை நிர்வாகம் மிக அலட்சியத்துடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக நோயாளிகளின் ரத்த பரிசோதனை முடிவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் நாள் கணக்கில் காத்து கிடந்தனர் இதுதொடர்பான வீடியோவும் வலைத்தளங்களில் வெளியானது.

இந்த நிலையில் மேலும் ஒரு சம்பவமாக நெல்லை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் பிரசவம் முடிந்த பெண்களுக்கு படுக்கைகள் வழங்காததால் பெண்கள் தங்களின் பச்சிளம் குழந்தையுடன் தரையில் படுத்து கிடக்கின்றனர். குறிப்பாக அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் ஆன பெண்களும் தரையில் படுக்கும் அவலம் உள்ளது. பிறந்த குழந்தைகளை படுக்க வைக்க கூட மருத்துவமனை ஊழியர்கள் படுக்கைகள் வழங்குவதில்லை என கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் துணிகள் உள்ளிட்ட உடமைகளுடன் பெண்கள் பிரசவ வலியோடு தரையில் படுத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிர்வாகத்தினர் போதிய படுக்கைகள் ஒதுக்கி கொடுக்காத்தால் தான் இந்த அவலம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு வரை இதுபோன்று படுக்கைகள் இல்லாதபோது பெண்களுக்கு தரையில் படுக்க பாய் கொடுத்துள்ளனர் தற்போது அதுவும் வழங்கப்படாத்தால் பிரசவமான பெண்கள் வெறும் தரையில் படுக்கின்றனர். இதனால் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது பொதுவாகவே பிரசவ நேரத்தில் பெண்களுக்கு எளிதில் நோய் தொற்று ஏற்படும் என்பதால் தான் மருத்துவமனையில் சில நாட்கள் தங்கி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள் ஆனால் மருத்துவமனையில் நடைபெறும் இந்த அவலம் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது

Video Top Stories