குலசை முத்தாரம்மனுக்கு நன்றிக் கடன்; சுடுகாட்டில் 6 அடி ஆழ குழியில் வசிக்கும் மனிதர்; இதுதான் காரணம்!!

தொண்டைப் பகுதியில் இருந்த கேன்சர் நோய் மருத்துவமனைக்கு போகமலேயே  சரியானதால் அம்மனுக்கு சுடுகாட்டில் 6 அடி குழி தோண்டி அதில் இரவு பகலாக விரதமிருந்து வருகிறார் பக்தர்  ஒருவர். இது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

First Published Sep 23, 2022, 8:29 PM IST | Last Updated Sep 23, 2022, 8:29 PM IST

தென் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. முத்தாரம்மனை வழிபட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவது ஆண்டாண்டு கால நிகழ்வாகும். 

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சங்கனாங்குளம் ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சந்திரன் இவர் சுமார் 35 ஆண்டுகளாக விதவிதமான வேடமணிந்து அம்மனை தரிசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு தொண்டை பகுதியில் கேன்சர் ஏற்பட்டு சிகிச்சைக்கு உள்ளானார். சிகிச்சையில் முன்னேற்றம் கிடைக்கப்பெறாத நிலையில் அம்மனை மனம் உருகி வழிபட்டு வந்தார். அதன் பலனாக அவருக்கு ஏற்பட்ட கேன்சர் நோயின் பாதிப்பு வெகுவாக குறைய தொடங்கியது. அதற்கு முத்தாரம்மன் தான் காரணம் என்று நினைத்த அவர் அம்மனுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக 4 ஆண்டுகளாக சுடுகாட்டு காளி வேடம் அணிந்து விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்

இது குறித்து சுடுகாட்டு காளி சந்திரன் கூறுகையில், ''எனக்கு வந்த தீராத நோயான கேன்சர் என்னை மரண வாசலில் கொண்டு போய் விட்டது. அந்த நேரத்தில் மருத்துவர்களும் உறவினர்களும் என்னை கைவிட்ட நேரத்தில் என்னை காப்பாற்றியது குலசை முத்தாரம்மன் தான். நான் 35 ஆண்டுகளாக குலசை முத்தாரம்மனின் பக்தர். ஆனால் நான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட போது முத்தாரம்மன்னை மட்டுமே நம்பி இருந்தேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை.

ஆகவே தான் கடந்த 4 ஆண்டுகளாக சுடுகாட்டு காளி வேடமணிந்து 21 நாட்கள் அன்ன ஆகாரம் உண்ணாமல் சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்ய தோண்டப்படும் குழி போன்று குழி தோண்டி அந்த குழியில் தங்கி இரவு பகல் வசித்து வருகிறேன். அதனால் தான் உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாக நினைத்து சுடுகாடு வரை சென்று உயிருடன் திரும்புகிறேன். முத்தாரம்மனின் ஒரு அவதாரம் சுடுகாட்டு காளி'' என்றார். இவரிடம் அருள்வாக்கு பெறுவதற்காக ஏராளமான பக்தர்கள் அவரை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.