தொடர் மழை எதிரொலி; சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு, சுற்றுலா பயணிகளுக்கு தடை
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழையின் காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும், ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதன் காரணமாக சுருளி அருவி நீர் பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை பகுதியில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தொடர் தடை விதித்து அனைவரையும் திருப்பி அனுப்பி வைத்தனர்.
மேலும் மழை காரணமாக அருவி பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என கம்பம் கிழக்கு வனச்சரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.