காவிரி மேலாண்மை ஆணைய தலைவரின் உருவ பொம்மையை எரித்து போராட்டம்; தஞ்சையில் பரபரப்பு
காவேரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தரை உடனடியாக மாற்ற வலியுறுத்தி அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டம்.
தஞ்சை மாவட்டம் பனகல் கட்டிடம் அருகே காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் 1960 முதல் 70 ஆம் ஆண்டு வரை கர்நாடகாவில் ஏமாவதி, ஏரங்கி, கபினி உள்ளிட்ட அணைகளை கட்டுவதற்கு காங்கிரஸ் அரசு ஒப்புதல் கொடுத்தது. இப்போது பாஜக அரசு நேரடியாகவே மேகதாதுவில் அணை கட்ட ஒப்புதல் கொடுக்கிறது.
இதேபோல் மேகதாது அணையின் கொள்ளளவு 67 டிஎம்சி. இந்த அணை கட்டப்பட்டால் கர்நாடகத்தில் எவ்வளவு பெரிய வெள்ளம் வந்தாலும் எல்லா தண்ணீரையும் தேக்கி கொள்ளும். ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு வராது. மேலும் கடந்த ஒன்றாம் தேதி டில்லியில் நடந்த காவேரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டி கொள்ளலாம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அதற்கான ஒப்புதலை கர்நாடகா அரசு இந்திய அரசின் நீராற்றல் துறைக்கு வழங்கி உள்ளது.
உடனடியாக இதை கைவிட வேண்டும். தொடர்ந்து தமிழக அரசுக்கு ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வரும் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தரை மாற்ற வலியுறுத்தி இன்று அவரது உருவ பொம்மை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த உருவ பொம்மை எரிக்கும் போராட்டதால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காவிரி உரிமை மீட்பு குழுவினரை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றிய சில நிமிடங்களில் விடுவித்தனர்.