சிவகங்கை ஏழைக்காத்தாள் அம்மன் கோவில் திருவிழா; உடல் முழுவதும் சேறு பூசி பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே ஏழைகாத்தாள் அம்மன் கோவில் மது எடுப்பு நடைபெற்ற நிலையில் பக்தர்கள் விநோதமான முறையில் உடலில் சேறு பூசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Share this Video

சிவகங்கை மாவட்டம் தமறாக்கி, குமாரபட்டி கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட ஏழைகாத்தாள் அம்மன் கோவில் அப்பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மது எடுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவானது ஒரு மாத காலம் நடைபெறும். இந்நிலையில் கடந்த நவம்பர் 27ம் தேதி காப்பு கட்டுதளுடன் திருவிழா துவங்கியது. 

தினந்தோறும் அம்மன் போல் ஏழு சிறுமிகளை அலங்கரித்து கோவில் மண்டபத்தில் காட்சி தருவார்கள். அதனைத் தொடர்ந்து 15ம் நாளான நேற்று அய்யனார் கோவிலுக்கு சுமார் 30க்கும் மேற்பட்ட மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை புரவியாக எடுத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனை செலுத்தினார்கள். அடுத்த நிகழ்வாக 16ம் நாளான இன்று ஏழைகாத்தாள் அம்மனுக்கு மது எடுத்து செல்லும் வழி நெடுக பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடுகளை பலி கொடுத்து செல்கின்றனர்.

இத்திருவிழாவில் சிறப்பாக ஏராளமான ஆண்கள் தங்கள் உடம்பில் சேற்றை பூசிக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவதும் வழக்கமாக உள்ளது. முன் காலத்தில் தோல் நோயினை போக்குவதற்கு இதுபோன்று உடலில் சகதி பூசி வந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் இவர்களைப் பயன்படுத்துகின்றனர். விவசாயிகள் புரட்டாசி மாதத்தில் விவசாய பணிகளை முடித்து கார்த்திகை மாதம் முழுவதும் திருவிழா கொண்டாடி மகிழ்கின்ற சிறப்பும் இப்பகுதியில் ஆண்டுதோறும் நிகழ்ந்து வருகிறது. 

இத்திருவிழாவின் இறுதி நிகழச்சியானது வருகிற டிசம்பர் 19ம் தேதி முடிவடைகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வண்ணம் நூதனமுறையில் உடல் முழுவதும் சேறு பூசி வேடமணிந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது திருவிழாவின் சிறப்பாகும். இக்கோவில் திருவிழாவில் தமறாக்கி, குமாரபட்டி, கண்டாங்கிபட்டி, கள்ளங்குளம், ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Related Video