தமிழர்களின் வாழ்வியலை கீழடி அருங்காட்சியகம் பிரதிபலிக்கிறது - அமைச்சர் பெருமிதம்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நேரில் பார்வையிட்டார்.

First Published Apr 5, 2023, 11:22 AM IST | Last Updated Apr 5, 2023, 11:22 AM IST

2600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வாழ்வியல், தொழில், விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட ஆதாரங்கள் கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஐந்து கட்ட அகழாய்வுகள் நடத்தப்பட்ட நிலையில் அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களை கீழடியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் 5ம் தேதி இதனை திறந்து வைத்தார். நாள் தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அருங்காட்சியகத்தை நேரில் கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கீழடி அருங்காட்சியகத்தை நேரில் பார்வையிட்டார். 

அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிவப்பு நிற பானைகள், சாம்பல் நிற பானைகள், அணிகலன்கள், வரிவடிவ எழுத்துகள், தாழிகள் உள்ளிட்டவைகள் குறித்தும், ஆய்வு முடிவுகள் குறித்தும் தொல்லியல் துறை இணை இயக்குனர், தொல்லியல் அலுவலர்கள் உள்ளிட்டோர் விளக்கமளித்தனர். 

அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறுகையில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வாழ்வியல், நெசவு தொழில் உள்ளிட்டவற்றிற்கான ஆதாரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், குறிப்பாக மாணவ, மாணவியர்கள் தமிழர்களின் பெருமையை நேரில் கண்டு ரசித்து வருகின்றனர். தமிழர்களின் பழம் பெருமை இதன் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த தமிழர்களின் வாழ்வியலை அருங்காட்சியகம் பிரதிபலிக்கிறது என்றார்.

Video Top Stories