விறுவிறுப்பாக நடைபெற்ற சிறவாவயல் மஞ்சுவிரட்டில் நிகழ்ந்த சோகம்; சிறுவன் உள்பட இருவர் பலி
சிவகங்கை மாவட்டம் சிறாவயல் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியி்ல் மாடு முட்டியதில் சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறாவயல் கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுபினர் மாங்குடி முன்னிலையில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளில் இருந்து 272 காளைகளும், 81 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். மேலும், 8 மருத்துவக் குழுக்களும், காவல் துறையைச் சார்ந்த சுமார் ஆயிரம் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டதில் மாடு முட்டியதில் ராகுல்(வயது 11) என்ற சிறுவன் பலியானார். மேலும் அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கதக்க ஆண் ஒருவரும் பலியாகி உள்ளார். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் முதலுதவி அளிக்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.