புரோட்டா இல்லை என்று கூறிய கடைக்காரரை காற்றில் பறக்க விட்டு பந்தாடிய ரௌடிகள்
சாயல்குடியில் இரவு பத்து முப்பது மணிக்கு மேல் புரோட்டோ தர மறுத்ததால் ஹோட்டல் உரிமையாளரை அடித்து துவைத்த மர்ம வாலிபர்கள், CCTV காட்சிகள் வைரல்.
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (வயது 45). இவர் சாயல்குடி கன்னியாகுமரி செல்லும் சாலையில் ஜமாலியா என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி இரவு 10.30 மணி அளவில் நான்கு வாலிபர்கள் உணவகத்திற்கு வந்துள்ளனர். அப்பொழுது புரோட்டோ உள்ளிட்ட உணவு பொருட்கள் முடிந்து விட்டதால் கடையை அடைப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர்கள் அப்துல் லத்தீப்பிடம் புரோட்டோ போடு என கூறியுள்ளனர். புரோட்டோ தீர்ந்து விட்டது என லத்தீப் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நான்கு வாலிபர்களும் உணவகத்தில் இருந்த விறகு உள்ளிட்டவற்றால் உரிமையாளரை அடித்து துவைத்தனர்.
அதிலும் ஆத்திரமடங்காமல் அருகே இருந்த கல்லாப்பெட்டியை கீழே தள்ளி சேதப்படுத்தி ஆத்திரம் தீராமல் உரிமையாளரை அருகே இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தூக்கி அடித்து அவரை காயப்படுத்தினர். இந்நிலையில் உணவக உரிமையாளர் தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.