Watch : தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே கடலை 20 மணி நேரத்தில் நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளி!
சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் என்ற மாற்றுத்திறனாளி, `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே கடலை 20 மணி நேரத்தில் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
சென்னையை சேர்ந்த ராஜசேகரன், வனிதா தம்பதியின் மகன் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ்(29). இவர் பிறவியிலேயே கால், கைகள் செயல்படாத மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி இவர், `செரிபரல் பால்ஸி' என்ற நோயால் பாதிக்கப் பட்டவர்.
இவரால் பேசவோ, தானே தனது தேவைகளை பூர்த்தி செய்யவோ முடியாது. இருந்த போதும், இவரது பெற்றோர் இவரை ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் 4 வயது முதல் நீச்சல் கற்று கொடுக்கத் தொடங்கினர்.
கடந்த 2018-ல் தேசிய மாணவர் படை நடத்திய போட்டியில் கடலூர்- புதுச்சேரி 5 கி.மீ. தொலைவை கடலில் நீந்தி சாதனை படைத்தார். இதற்காக அவருக்கு மத்திய அரசின் சமூக நீதித்துறை, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த முன் மாதிரி இளைஞர் என்ற தேசிய விருதை வழங்கியது. இவ்விருதை அப்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கினார்.
இந்நிலையில் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான 32 கி.மீ. தூர பாக் நீரிணை கடலை நீந்திக் கடக்க திட்டமிட்டார். மாலை 5.10 மணிக்கு தலைமன்னாரிலிருந்து நீந்தத் தொடங்கி, 13-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு தனுஷ்கோடிக்கு வந்தடைந்தார். தனுஷ்கோடி கடற்கரைக்கு வந்தடைந்த சாதனை படைத்த மாற்றுத்திறனாளி ஸ்ரீனிவாசுக்கு அவரது உறவினர்கள் துணை கண்காணிப்பாளர் உமாராணி பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் நகர் மன்ற தலைவர் நாசர்கான் நகர்மன்ற உறுப்பினர்கள் சத்யா முகேஷ் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பொன்னாடை போற்றி கௌரவித்தும் வாழ்த்து தெரிவித்தும் வரவேற்பு அளித்தனர். `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் தலைமன்னார்- தனுஷ்கோடி கடலை, நீந்திக்கடக்கும் முதல் மாற்றுத்திறனாளி இளைஞர் என்ற உல க சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.