புதுக்கோட்டையில் போட்டி போட்டு மீன்களை அள்ளிய கிராம மக்கள்
பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் பாரம்பரிய ஊத்தா குத்து போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் போட்டிப்போட்டு மீன்களை அள்ளினர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள ஊமையன் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி உபகரணமான ஊத்தா மூலம் மீன்களை பிடிக்கும் மீன்பிடி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இந்த போட்டியில் ஜாதி மத,பேதம் இன்றி கலந்துகொண்ட போட்டியாளர்கள் வெற்றி பெறும் முனைப்பில் ஆர்வமுடன் செயல்பட்டனர்.
போட்டியாளர்கள் பங்கேற்க ஒரு ஊத்தா மீன்பிடி உபகரணத்திற்கு நுழைவுக்கட்டணம் பெறப்பட்டு போட்டி நடக்கும் கண்மாயில் போட்டியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மீன்பிடி ஆர்வலர்கள் ஒன்றன்பின் ஒன்றாக போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கத் தொடங்கி ஊத்தாவை வைத்து நாட்டு வகை மீன்களான கட்லா, பாப்லட், கெண்டை, கெளுத்தி, விரால், ஜிலேபி, மீசை கெளுத்தி உள்ளிட்ட மீன்களை லாபகமாக பிடித்தனர். இந்நிகழ்வை காண ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.